Tuesday, September 27, 2016

பாபநாசம் சிவஸ்தலம்

பாபநாசர் ருத்ரசாய் லிங்கம் (Pic. Source)
அம்மன் உலகம்மை (Pic. Source)




பொதிகை மலையின் உச்சியில் உருவாகும் தாமிரபரணியாறு சமதளத்தை அடையும் இடமே பாபநாசம் ஆகும். திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். நெல்லை, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் கயிலாயம் சென்றதால் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதைச் சமன் செய்யும் பொருட்டு அகத்திய முனிவரை அழைத்து தென்திசைக்கு செல்லும்படி பணிக்கிறார் சிவபெருமான்.

பகவானின் கட்டளையை ஏற்று தென் திசையிலுள்ள பொதிய மலையில் எழுந்தருளினார் அகத்தியர். அவருக்கும் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சியளிக்க விரும்பிய சிவபெருமான், சக்தி சமேதராக அம்மை-அப்பனாக காட்சியளித்த இடமே பாபநாசமாகும்.
அகத்தியர் (Pic. Source)


பாபநாசத்துக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும். 

சூரிய தலம்

அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர் பிறவிப் பெரும் பயன் அடைவதைப் பற்றி அகத்தியரிடம் கேட்க, அவர் பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு செல்லும் பாதையில் மலர்கள் ஒதுங்கும் இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். அவ்வாறு பூக்கள் சேர்ந்த இடங்களில் உள்ள நவ கைலாயத் தலங்களை பிரதிஷ்டை செய்தார் உரோமச முனிவர். இவ்வாறு திருநெல்வேலியைச் சுற்றி நவக்கிரக தலங்கள் அமையப்பெற்றன. அவற்றில் பாபநாசம் சூரியனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

ஐதீக அம்சங்கள்

கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால், அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த இடம்.
உலகம்மைக்கு நடைபெறும் அபிஷேக தீர்த்தத்தை பருகினால் திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைப்பதோடு தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம்.

 

பாபங்கள் கரையுமிடம்

அக்காலத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சிறுவனும், சிறுமியும் சந்தர்ப்ப சூழலால் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்தார்களாம். காலங்கள் உருண்டோட, மற்றொரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்து, அண்ணன்-தங்கை என்பதை அறியாமலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். 

பின்னாட்களில் ஒரு நாள் இந்த உண்மை தெரியவரும்போது இருவரும் மிகவும் மனம் வெதும்பினர். அப்போது, பெரியவர்கள் சிலர், ‘நீங்கள் இருவரும் கருப்பு உடையணிந்து எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுங்கள். எப்போது உங்கள் கருப்பு ஆடை, வெண்மையாக மாறுகிறதோ அப்போது உங்கள் பாபம் நீங்கப் பெற்றது’ என்று பொருள் எனக் கூறி அனுப்பி வைக்கின்றனர்.

எல்லா நதியிலும் நீராடிவிட்டு கடைசியாக பாபநாசம் கோயில் முன்நின்று இருவரும் நீராட ஆடை வெண்மையாய் மாறியதாம்! ஆகவேதான், இந்நதி பாபநாசம் எனும் பெயர்பெற்றதாம் என்பது வரலாறு. கலியுக வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு பாவச் செயல்களுக்கு ஆட்படும் நாம், இப்புண்ணிய தலம் சென்று பாபவிநாசகரை வழிபட்டு பாபநாசம் புண்ணிய நதியில் மனச்சுத்தியுடன் புனிதநீராடி பாபங்கள் கரையப்பெறுவோமாக.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
---------------------------

ஆலய முகவரி

அருள்மிகு பாவநாசர் திருக்கோயில்
பாபநாசம்
வி.கே.புரம் அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
627425
போன்: 04634 223268
கோயில் திறப்பு:
காலை 6.30 முதல் பகல் 12 மணி
மாலை 4.30 முதல் இரவு 8 மணி