Thursday, January 26, 2017

Sri Garbarakshambigai, Sri Mullaivananathar Swamy Temple

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவில் பற்றி 30 சிறப்பு தகவல்கள்


1.தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.

2. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

3. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு .

4. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போதும் கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்தக் காணிக்கையை செலுத்துகிறார்கள் .

5. இங்கு தல நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.

6. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத் தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.

7. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

8. காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.

9. ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது .

10. இக்கோவிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது .

11. மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது .

12. இங்குள்ள நந்தி உளிபடாத விடங்க மூர்த்தம் என்பர் .

13. இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

14. சோழர்கள், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன .

15. முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர்“ என்று தலம் குறிக்கப்படுகின்றது .

16. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்துபசி போக்கிய தலமென்பது தொன் நம்பிக்கை (ஐதிகம்).

17. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18 ஆவது சிவத்தலமாகும்.

18. திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப் பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம் ,திருக்கருகாவூர் , கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.

Arulmigu Appan Sri Mullaivananathar, Arulmigu Amma Sri Garbarakshambigai

19. மாதவி (முல்லைக் கொடியை ) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்று பெயர் பெற்றது.

20. இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் சிறப்புடையது.

21. க்ருத யுகத்தில் தேவர்களும், த்ரேதா யுகத்தில் முனிவர்களும், துவாபர யுகத்தில் சூரியன் , சந்திரன், நட்சத்திரங்கள், தேவதைகளும் வணங்கினர். கலியுகத்தில் முனிவர்களும், மனிதர்களும் வணங்கி வரும் தலம் திருக்கருகாவூர் தலமாகும்.
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை

22. அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வருகிறாள்.

23. பொன்னி நதி பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

24. இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர், மன்னர் குசத்துவசன் , சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது.

25. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

26. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்: தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல், முதுகுன்றம் – நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும் .

27. தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதைக் காணலாம்.

28. பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார்.

29. சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான்.

30. கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார் . போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது . கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.

கோவில் முகவரி : அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி திருக்கருகாவூர் அஞ்சல், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்