Monday, November 21, 2016

பைரவ ஜெயந்தி (Sri Bairava Jayanthi)

எல்லோருக்கும் கிட்டிடாது பைரவ ஜெயந்தி வழிபாடு!


அமாவாசையில் இருந்து கணக்கிடப்படும் எட்டாம் நாளே தேய்பிறை அஷ்டமி. அதுவும் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமிக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்நன்னாளில்தான், துர்தேவதைகளையும், துஷ்ட சக்திகளையும் விரட்டியடிக்கும் முகமாக அவதரித்தார் கால பைரவ பெருமகனார்

Arulmigu Sri Dhaksina Kasi Kala Bhairavar, Dharmapuri. Image Source

ஓராயிரம் கொண்ட சிவனின் ஆற்றல் அம்சத்தில், பைரவருக்கு என்று தனிச்சிறப்பிடம் உண்டு. ஏவல், பில்லி, சூனியம், பீடை, துர் தேவதைகளின் ஆதிக்கம் என நம் கண்ணுக்கு புலப்படாத பல்வேறு துஷ்ட சக்திகளின் தாக்கத்தால் பலருக்கு வாழ்க்கை சூன்யமாகிவிடுவது உண்டு. 

வீட்டில் பெரும் சண்டைச் சச்சரவுகள், கடும் வழக்குப் போராட்டம், குடும்ப உறவுகளில் கடும் பிரிவினை என எதிர்மறை நிகழ்வுகளின் உக்கிரம் நம் மனதை சாவின் விளிம்புக்கே கொண்டு சென்று நிறுத்தும். எதைத் திண்றால் பித்தம் தெளியும் என தேடுவதைப் போல, பேதை மனம் இத்தகைய தாக்கங்களில் இருந்து விடுபட ஏங்கும். நிம்மதியான இடத்தைத் தேடி அலையும்.

இதை ஒவ்வொருவரும் தனிமனித வாழ்வில் கடந்தே வந்திருப்பர். சிலர் தற்போது கடந்து கொண்டும் இருப்பர். அவர்களுக்கு எல்லாம் ஒப்பற்ற பரிகாரம்தான் பைரவ வழிபாடு. அதுவும் தேய்பிறை அஷ்டமி இன்னும் சிறப்பு வாய்ந்தது.

அதனினும், மிகச் சிறப்பு வாய்ந்தது, பைரவர் அவதரித்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியாகும். நாளை (திங்கள்கிழமை - 21.11.2016) இந்த அஷ்டமி தினத்தில் அருகில் உள்ளத் திருத்தலங்களுக்குச் சென்று பைரவரின் பார்வையில் பட்டு மனமுருகி பிரார்த்தித்தால், மேற்கூறிய அனைத்து வகை எதிர்மறை தாக்கங்களில் இருந்தும் பரிபூரணமாய் விடுபடுவது திண்ணம். மாலை வேலையில் வழிபடுவது கூடுதல் சிறப்பு மிக்கது.

இத்தகைய அரிய வாய்ப்பு என்பது காலக்கிரகத்தில் எல்லோருக்குமே கிட்டிவிடாத ஒன்று. தீராத நோய்க்கு மருத்துவமும், அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டு வரும் அன்பர்கள், வேகமான வாழ்வில் நிம்மதியை இழந்து தவிக்கும் அன்பர்கள் என அனைவரும் இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்