Wednesday, November 16, 2016

Arulmigu Thiruporur Kandasamy Temple

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் – விண்ணேறிய வீரம்

 

காதல், வீரம் என தமிழரின் இரு அணிகலன்களுக்கும் அதிபதியான திருமுருகத் தமிழ்க் கடவுள், அசுரர்களை மூன்று இடங்களில் எதிர்கொள்கிறார். திருச்செந்தூரில் கடல்வழியாக தாக்குதல் நடத்தி சூரனை வதம் செய்கிறார். திருக்கழுக்குன்றத்தில் தரைவழித் தாக்குதலும், மேகங்களில் சென்று ஒளிந்த அசுரர்களை திருப்போரூரில் இருந்து வான்வழியிலும் தாக்கி தர்மத்தை நிலைநாட்டுகிறார். விண்ணில் போர் புரிந்து அசுரர்களின் ஆணவத்தை அடக்கிய முருகனின் பராகிரமத்தைப் பறைசாற்றுகிறது திருப்போரூர் கந்தசுவாமி கோயில்.

Thiruporur Arulmigu Ammai Valli, Ammai Deivanai samedha Kandhasamy . Image source and additional information (English)
சுயம்பு மூர்த்தியாக சுவாமி எழுந்தருளிய சிறப்பு திருப்போரூருக்கு உண்டு. பெண் பனை மரத்தின் அடியில் கந்தவேளன் இருக்கும் நிலையை, மதுரையில் வாழ்ந்த சிதம்பர சுவாமிக்கு கனவில் வந்து தெரியப்படுத்துகிறார் மதுரை மீனாட்சி. யுத்தபுரியில் (திருப்போரூர்) என் குமாரனாகிய கந்தவேளின் திருமேனியை வழிபாட்டுக்குரியதாக்க உத்தரவிடுகிறார். உத்தரவை ஏற்ற சிதம்பர சுவாமி, பெண் பனை மரத்தின் அடியில் முருகரை கண்டெடுத்து, காட்டை சீர்திருத்தி அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து புதிய கோயில் எழுப்பினார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, சுவாமியுடன், சிதம்பர சுவாமி இரண்டற கலக்கும் வைபவம் அரங்கேறும்.

நிலத்தில் இருந்து விண்ணேறி வீரத்தை நிலைநாட்டிய தலம் என்பதால், வெளிநாடு பயணித்தல், வெளிநாடு வணிகங்களில் ஏற்படும் பிணக்குகள், வெளிநாடுகளிலும், வெளிநாடு சம்பந்தமான சட்ட சிக்கல்களில் பாதிக்கப்படுவோருக்கும் இத்தலம் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சுயம்பு மூர்த்தி என்பதால் முருகனை அதிதேவதையாகக் கொண்ட செவ்வாய் பகவானை சிறப்பிக்கும் வகையில் கூர்ம பீடத்தின் மீது யந்திரம் (ஸ்ரீ சக்கரம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கே, வழிபாடு நடத்துவது செவ்வாய் தோஷமுள்ளவர்களுக்கும், செவ்வாய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறந்த பரிகாரமாக அமைகிறது.

சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக்கோயில்  

 

திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கண்ணகப்பட்டு எனும் ஊருக்கு இடம் பெயர்ந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு மடாலயம், பூஜை மடம் மற்றும் ஒடுக்க அறை ஆகியவற்றை அமைத்தார். ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார்.  

Sri Chidambara Swamigal. Image source and additional information (English)
திருப்போரூர் முருகப்பெருமானின் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், சுவாமிகளை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுவாமிகள் தினமும் நீராடிய வள்ளையர் ஓடை, "சரவணப் பொய்கை" எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக, முருகப் பெருமான் கோயிலுக்கு முன்னே இன்றும் உள்ளது. 

கி.பி. 1659-ஆம் ஆண்டு வைகாசி மாத விசாக தினத்தில், மடாலயத்தில் ஒடுக்க அறைக்குள் இருந்து சுரங்கம் ஒன்றின் வழியே சமாதிக் குழிக்குள், பூஜா திரவியங்களுடன் சென்று இறைவனை பூஜித்து வழிபட்டு சமாதியின் உள்ளேயே பரிபூரணம் அடைந்தார் சிதம்பர சுவாமிகள். 

இதேநேரத்தில் திருப்போரூர் ஆலயத்தில், மூலவர் கந்தசாமியின் திருச்சந்நிதியை நோக்கி, கூப்பிய கரங்களுடன் சென்று மூலவர் திருமேனியுடன் இரண்டறக் கலந்தார். கண்ணகப்பட்டில் அமைந்த சுவாமிகளின் திருக்கோயில் அதிஷ்டானம் என்றோ ஜீவ சமாதி என்றோ சொல்லப்படுவது இல்லை. “சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக் கோயில்” என்றே வழங்கப்படுகிறது. திருப்போரூர் கந்தசாமியை தரிசிப்பவர்கள் தவறாமல் இம்மடாலயம் சென்று வருதல் சிறப்பு.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
திருப்போரூர் – 603 110
காஞ்சிபுரம் மாவட்டம்
044-2744 6226
90031 27288


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்