Monday, November 21, 2016

பைரவ ஜெயந்தி (Sri Bairava Jayanthi)

எல்லோருக்கும் கிட்டிடாது பைரவ ஜெயந்தி வழிபாடு!


அமாவாசையில் இருந்து கணக்கிடப்படும் எட்டாம் நாளே தேய்பிறை அஷ்டமி. அதுவும் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமிக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்நன்னாளில்தான், துர்தேவதைகளையும், துஷ்ட சக்திகளையும் விரட்டியடிக்கும் முகமாக அவதரித்தார் கால பைரவ பெருமகனார்

Arulmigu Sri Dhaksina Kasi Kala Bhairavar, Dharmapuri. Image Source

ஓராயிரம் கொண்ட சிவனின் ஆற்றல் அம்சத்தில், பைரவருக்கு என்று தனிச்சிறப்பிடம் உண்டு. ஏவல், பில்லி, சூனியம், பீடை, துர் தேவதைகளின் ஆதிக்கம் என நம் கண்ணுக்கு புலப்படாத பல்வேறு துஷ்ட சக்திகளின் தாக்கத்தால் பலருக்கு வாழ்க்கை சூன்யமாகிவிடுவது உண்டு. 

வீட்டில் பெரும் சண்டைச் சச்சரவுகள், கடும் வழக்குப் போராட்டம், குடும்ப உறவுகளில் கடும் பிரிவினை என எதிர்மறை நிகழ்வுகளின் உக்கிரம் நம் மனதை சாவின் விளிம்புக்கே கொண்டு சென்று நிறுத்தும். எதைத் திண்றால் பித்தம் தெளியும் என தேடுவதைப் போல, பேதை மனம் இத்தகைய தாக்கங்களில் இருந்து விடுபட ஏங்கும். நிம்மதியான இடத்தைத் தேடி அலையும்.

இதை ஒவ்வொருவரும் தனிமனித வாழ்வில் கடந்தே வந்திருப்பர். சிலர் தற்போது கடந்து கொண்டும் இருப்பர். அவர்களுக்கு எல்லாம் ஒப்பற்ற பரிகாரம்தான் பைரவ வழிபாடு. அதுவும் தேய்பிறை அஷ்டமி இன்னும் சிறப்பு வாய்ந்தது.

அதனினும், மிகச் சிறப்பு வாய்ந்தது, பைரவர் அவதரித்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியாகும். நாளை (திங்கள்கிழமை - 21.11.2016) இந்த அஷ்டமி தினத்தில் அருகில் உள்ளத் திருத்தலங்களுக்குச் சென்று பைரவரின் பார்வையில் பட்டு மனமுருகி பிரார்த்தித்தால், மேற்கூறிய அனைத்து வகை எதிர்மறை தாக்கங்களில் இருந்தும் பரிபூரணமாய் விடுபடுவது திண்ணம். மாலை வேலையில் வழிபடுவது கூடுதல் சிறப்பு மிக்கது.

இத்தகைய அரிய வாய்ப்பு என்பது காலக்கிரகத்தில் எல்லோருக்குமே கிட்டிவிடாத ஒன்று. தீராத நோய்க்கு மருத்துவமும், அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டு வரும் அன்பர்கள், வேகமான வாழ்வில் நிம்மதியை இழந்து தவிக்கும் அன்பர்கள் என அனைவரும் இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Wednesday, November 16, 2016

Arulmigu Thiruporur Kandasamy Temple

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் – விண்ணேறிய வீரம்

 

காதல், வீரம் என தமிழரின் இரு அணிகலன்களுக்கும் அதிபதியான திருமுருகத் தமிழ்க் கடவுள், அசுரர்களை மூன்று இடங்களில் எதிர்கொள்கிறார். திருச்செந்தூரில் கடல்வழியாக தாக்குதல் நடத்தி சூரனை வதம் செய்கிறார். திருக்கழுக்குன்றத்தில் தரைவழித் தாக்குதலும், மேகங்களில் சென்று ஒளிந்த அசுரர்களை திருப்போரூரில் இருந்து வான்வழியிலும் தாக்கி தர்மத்தை நிலைநாட்டுகிறார். விண்ணில் போர் புரிந்து அசுரர்களின் ஆணவத்தை அடக்கிய முருகனின் பராகிரமத்தைப் பறைசாற்றுகிறது திருப்போரூர் கந்தசுவாமி கோயில்.

Thiruporur Arulmigu Ammai Valli, Ammai Deivanai samedha Kandhasamy . Image source and additional information (English)
சுயம்பு மூர்த்தியாக சுவாமி எழுந்தருளிய சிறப்பு திருப்போரூருக்கு உண்டு. பெண் பனை மரத்தின் அடியில் கந்தவேளன் இருக்கும் நிலையை, மதுரையில் வாழ்ந்த சிதம்பர சுவாமிக்கு கனவில் வந்து தெரியப்படுத்துகிறார் மதுரை மீனாட்சி. யுத்தபுரியில் (திருப்போரூர்) என் குமாரனாகிய கந்தவேளின் திருமேனியை வழிபாட்டுக்குரியதாக்க உத்தரவிடுகிறார். உத்தரவை ஏற்ற சிதம்பர சுவாமி, பெண் பனை மரத்தின் அடியில் முருகரை கண்டெடுத்து, காட்டை சீர்திருத்தி அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து புதிய கோயில் எழுப்பினார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, சுவாமியுடன், சிதம்பர சுவாமி இரண்டற கலக்கும் வைபவம் அரங்கேறும்.

நிலத்தில் இருந்து விண்ணேறி வீரத்தை நிலைநாட்டிய தலம் என்பதால், வெளிநாடு பயணித்தல், வெளிநாடு வணிகங்களில் ஏற்படும் பிணக்குகள், வெளிநாடுகளிலும், வெளிநாடு சம்பந்தமான சட்ட சிக்கல்களில் பாதிக்கப்படுவோருக்கும் இத்தலம் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சுயம்பு மூர்த்தி என்பதால் முருகனை அதிதேவதையாகக் கொண்ட செவ்வாய் பகவானை சிறப்பிக்கும் வகையில் கூர்ம பீடத்தின் மீது யந்திரம் (ஸ்ரீ சக்கரம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கே, வழிபாடு நடத்துவது செவ்வாய் தோஷமுள்ளவர்களுக்கும், செவ்வாய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறந்த பரிகாரமாக அமைகிறது.

சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக்கோயில்  

 

திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கண்ணகப்பட்டு எனும் ஊருக்கு இடம் பெயர்ந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு மடாலயம், பூஜை மடம் மற்றும் ஒடுக்க அறை ஆகியவற்றை அமைத்தார். ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார்.  

Sri Chidambara Swamigal. Image source and additional information (English)
திருப்போரூர் முருகப்பெருமானின் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், சுவாமிகளை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுவாமிகள் தினமும் நீராடிய வள்ளையர் ஓடை, "சரவணப் பொய்கை" எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக, முருகப் பெருமான் கோயிலுக்கு முன்னே இன்றும் உள்ளது. 

கி.பி. 1659-ஆம் ஆண்டு வைகாசி மாத விசாக தினத்தில், மடாலயத்தில் ஒடுக்க அறைக்குள் இருந்து சுரங்கம் ஒன்றின் வழியே சமாதிக் குழிக்குள், பூஜா திரவியங்களுடன் சென்று இறைவனை பூஜித்து வழிபட்டு சமாதியின் உள்ளேயே பரிபூரணம் அடைந்தார் சிதம்பர சுவாமிகள். 

இதேநேரத்தில் திருப்போரூர் ஆலயத்தில், மூலவர் கந்தசாமியின் திருச்சந்நிதியை நோக்கி, கூப்பிய கரங்களுடன் சென்று மூலவர் திருமேனியுடன் இரண்டறக் கலந்தார். கண்ணகப்பட்டில் அமைந்த சுவாமிகளின் திருக்கோயில் அதிஷ்டானம் என்றோ ஜீவ சமாதி என்றோ சொல்லப்படுவது இல்லை. “சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக் கோயில்” என்றே வழங்கப்படுகிறது. திருப்போரூர் கந்தசாமியை தரிசிப்பவர்கள் தவறாமல் இம்மடாலயம் சென்று வருதல் சிறப்பு.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
திருப்போரூர் – 603 110
காஞ்சிபுரம் மாவட்டம்
044-2744 6226
90031 27288


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Monday, November 14, 2016

Kubera Giri Valam (குபேர கிரிவலம்), Thiruvannamalai

குபேர கிரிவலம்


முழு பாவி என்று எவரும் இந்த கலியுகத்தில் பிறப்பதில்லை;
முழு புண்ணிய ஆத்மா என்றும் எவரும் இங்கே பிறப்பதில்லை;

மானுடப்பிறப்பின் நோக்கமே மறுபிறவி இல்லாத முக்திதான். இதை உணராமல் பல கோடி மனித ஆத்மாக்கள் பணத்தின் பின்பாகவும்,புகழைத் தேடியும், அதிகாரத்தை நோக்கியும் ஓடி அரிய மானுட வாழ்க்கையை வீணடித்து விடுகின்றார்கள்.

சில பல ஆன்மீக ரகசியங்களை எப்போதாவது பொது நல நோக்கில் யாராவது புண்ணிய ஆத்மாக்கள் வெளியிடுவது வழக்கம். அதில் ஒன்றுதான் குபேர கிரிவலம்!

Asta Lingams in Thiruvannamalai Arunachaleswarar Temple, Image Source

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார். வந்து, திரு அண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார். அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார். இதுதான் அந்த தெய்வீக ரகசியம்.

Geometery of Asta Lingams, Image Source
நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்தில் ஒரு மணி நேரம் இருந்து நமது தேவைகளை பிராத்தனையாக வைப்போம். அதன் பிறகு அங்கிருந்து நாமும் குபேரலிங்கத்தில் இருந்து கிரிவலம் ஆரம்பித்து குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்.  இப்படிச் செய்துவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது. எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது. நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அப்படி சென்றுவிட்டால். அடுத்த ஓராண்டுக்கு நமது வளர்ச்சி அபரிதமாக இருக்கும். 


கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள். (ஒரு வருடம் வரை அசைவம்,மது இரண்டையும் தவிர்த்ததால் வளமான வாழ்க்கையைப் பெற்றார்கள் என்பதை இங்கே நினைவிற்கொள்ளவும்.

இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைகிறது. இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம். அதன் பிறகு, அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம். குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம். பிறகு,நமது வீடுகளுக்குச் செல்வோம்.

Google Map of Girivalam, Image source, lots of additional information in English could be found here.
தொலைதூர ஊர்களில் வசிப்பவர்களும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முன்னதாகவே இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வோம்.

Thiruvannamalai Appan Arulmigu Sri Annamalayar, Annai Arulmigu Sri Unnamulaiammai, Image source


ஓம் அருணாச்சலாய நமஹ🙏

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Friday, November 11, 2016

சஷ்டி விரதம் (Shasti Vratam)

சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.
ஜோதிடத்தில் 6 ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 

16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு.
Arulmigu Sri Bala Subramanaya
சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன்.

Thiruchendhur Temple
சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக தீராத வழக்குகள், 14 ஆண்டுகளாக தீராத நோய் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
Thayar Valli, Thayar Devanai sametha Appan Murugan

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர்.
இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும். இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாக பொருள் கிடைக்கலாம்.

 நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.


-- திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 38 ( நாள் என் செயும்)

சொற்பிரிவு, பதவுரை: கௌமாரம்

Image source
Thiruchendhur Temple Website

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்



Thiruvannamalai Arunachaleswarar Temple

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

  • திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம்.எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.  
  •  இத்தலத்தில்தான்திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
  •  மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.
  •  பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். 
  • அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.
  • கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.
  •  ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.நகரின் மையத்தில், மலையடிவாரத்தில்!அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.



ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன.காலபைரவர் சந்நிதியும் உண்டு.


மூன்று இளையனார்!
 இங்கே முருகப்பெருமான்இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டுஅருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது. 

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.ஆடிப்பூரத்தன்றுமாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன்சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!  
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), 
வீரவல்லாள கோபுரம்,கிளி கோபுரம் (81 அடி உயரம்);
தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),
தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில்கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்).கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.

இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.



உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்! 
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால்இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.அவ்வாறே உமையும் தவம் செய்தாள்.கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையளவு பயன்! 
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான்இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால்முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். 

திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும்புண்ணியம் கிட்டும்.கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். 

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்! 

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். 

திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில்இடைக்காட்டு சித்தர்,அருணகிரிநாதர்,ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். 

கார்த்திகை ஜோதி மகத்துவம்! 

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும்அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில்பிரம்மா, தண்டு பாகத்தில்மகாவிஷ்ணு, நெய், எண்ணெய்நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள்,கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Agriculture and Planets




ஒரு விதை முளைப்பதற்கு நல்ல மண் வளம் (செவ்வாய்) தேவை.  நீர் வளம்(சந்திரன்) தேவை. நல்ல ஸ்டார்ச் (சூரிய ஒளி) தேவை. நல்ல பச்சயம் (புதன்) தேவை. நல்ல ஆரோக்யமான வளர்ச்சிக்கு கணிவான கவனிப்பு (குரு) தேவை.  நல்ல இனிமையான பழங்களை தருவதற்கு சுவையான நிலத்தடி நீர் (சுக்ரன்) தேவை.  உறுதியான ஸ்திரமான வளர்ச்சிக்கு அடிவேர் (சனி) ஆழமாக பரவி நிற்க வேண்டும். நன்கு அகண்டு பிரம்மாண்டமாய் வளர (ராகு) பலமும்  நோய் தாக்காமல் இருக்க பூச்சி கொல்லி மருந்தாக (கேது) பலமும் தேவை.  ஒரு செடி மரமாக வளரவே எல்லா கிரஹ சம்பந்தமும் வேண்டும் போது ஒரு மனிதன் ஆரோக்யமாக வளர எல்லா கிரஹமும் தேவைதானே...



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்