Monday, March 23, 2020

Ootathur Arulmigu Sri Rathasuddhaneeshwarar Temple

சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பஞ்சநத நடராஜர்!


பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே....
 - திருநாவுக்கரசர் தேவாரம்

பிறை தவழும் சடைமுடிச் சிவ பெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னும் இவற்றைத் தொழத் துன்பங்கள் தொடராது. 



அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேசுவரர், ஊட்டத்தூர் Source 



நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே....

 

நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஏடகம், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த பாடலூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருஊற்றத்தூர் (தற்போது ஊட்சதத்தூர் என்று அழைக்கப்படுகிறது) இங்குள்ள சுத்த ரத்தனேஸ்வரர் கோயிலில் உள்ளது அபூர்வ நடராஜர் பெருமான் திருமேனி.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான பஞ்சநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி இது ஆகும். இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சை சேமித்து கொள்ளும் ஆற்றல் உடையவை. இந்த வகை கற்சிலை தற்போது எங்கேயும் கிடையாது.

 பிரம்ம தீர்த்தம், Source

சிறுநீரகம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒருகிலோ வெட்டிவேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்து, பின்னர் 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒருகோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து நோய்களும் தீர்ந்துவிடுகிறது. மேலும், நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள பிரம்ம தீர்த்தத்தின் நீரை பருகுவதும் அவசியம்.(மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த பிரம்ம தீர்த்தத்தின் நீரை 48 நாட்கள் அருந்தி உடல் ஆரோக்கியம் பெற்றார் என்பது ஐதீகம்)


பஞ்சநதன நடராஜர் சிலையின் சிறப்பு



 அருள்மிகு பஞ்சநதன நடராஜர், Source


ஆலிங்க நதனம், பந்த நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதன என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக் கலை வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சூரிய ஒளியை உட்கிரகிக்கின்றன. சூரிய பிரகாசத்தை கிரகித்துத் தரும் அத்தகைய கல்லால் இச்சிலை செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

அருள்மிகு சிவகாமியம்மன், Source


அன்பர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருத்தலத்துக்கு சென்று நடராஜரின் அருளைப் பெற வேண்டுகிறேன்.

Other Web Links:

Om Guruve Namaha...

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்