Monday, March 23, 2020

Ootathur Arulmigu Sri Rathasuddhaneeshwarar Temple

சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பஞ்சநத நடராஜர்!


பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே....
 - திருநாவுக்கரசர் தேவாரம்

பிறை தவழும் சடைமுடிச் சிவ பெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னும் இவற்றைத் தொழத் துன்பங்கள் தொடராது. 



அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேசுவரர், ஊட்டத்தூர் Source 



நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே....

 

நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஏடகம், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த பாடலூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருஊற்றத்தூர் (தற்போது ஊட்சதத்தூர் என்று அழைக்கப்படுகிறது) இங்குள்ள சுத்த ரத்தனேஸ்வரர் கோயிலில் உள்ளது அபூர்வ நடராஜர் பெருமான் திருமேனி.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான பஞ்சநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி இது ஆகும். இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சை சேமித்து கொள்ளும் ஆற்றல் உடையவை. இந்த வகை கற்சிலை தற்போது எங்கேயும் கிடையாது.

 பிரம்ம தீர்த்தம், Source

சிறுநீரகம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒருகிலோ வெட்டிவேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்து, பின்னர் 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒருகோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து நோய்களும் தீர்ந்துவிடுகிறது. மேலும், நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள பிரம்ம தீர்த்தத்தின் நீரை பருகுவதும் அவசியம்.(மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த பிரம்ம தீர்த்தத்தின் நீரை 48 நாட்கள் அருந்தி உடல் ஆரோக்கியம் பெற்றார் என்பது ஐதீகம்)


பஞ்சநதன நடராஜர் சிலையின் சிறப்பு



 அருள்மிகு பஞ்சநதன நடராஜர், Source


ஆலிங்க நதனம், பந்த நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதன என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக் கலை வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சூரிய ஒளியை உட்கிரகிக்கின்றன. சூரிய பிரகாசத்தை கிரகித்துத் தரும் அத்தகைய கல்லால் இச்சிலை செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

அருள்மிகு சிவகாமியம்மன், Source


அன்பர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருத்தலத்துக்கு சென்று நடராஜரின் அருளைப் பெற வேண்டுகிறேன்.

Other Web Links:

Om Guruve Namaha...

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thirukolakka Alulmigu Sri Sapthapureeswarar Sri Oosai Kudtha Nayagi Amman Temple

பேசும், கேட்கும் திறன் நல்கும் ஓசைநாயகி அம்மன்!

 

நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சமந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
நன்மை  யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க  ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டு கொண்டேனே....
 
 
- அருள்மிகு திரு சுந்தரர், Source 
 
 
 
அருள்மிகு ஒம் ஒசைநாயகி சமேத தாளபுரிஸ்வரர்,  திருகோலக்கா சீர்காழி Source
 
 
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது
திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு
தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்துஅம்பிகைக்கு ஓசை
கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனைசுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். 
 
சிவன், திருநானசம்பந்தர்க்கு பொற்தாளம் வழங்கி வாழ்துதல், Source
 பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். 

 இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.

 வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.  மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்

  
Arulmigu Appan Sri Thalapureeshwarar, Source
 சீர்காழி திருக்கோலக்கா தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ தாளபுரீஸ்வர ஸ்வாமி ஆலயம். இக்கோயிலை யார் அறிந்திருப்பரோ இல்லையோ ENT மருத்துவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இங்கு சாமான்ய மக்கள் முதல், மேட்டுகுடியினர் வரை வந்து செல்வதை காண முடியும்.


 பேசும், கேட்கும் திறனை அருளும் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாளின் அற்புதங்களே இதற்குக் காரணம். மருத்துவர்களால் கைவிடப்பட்ட, பேசும் மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளும் வயது வந்தவர்களும் அம்பாளின் அருளினால் இத்திறன்கள் கைகூடப் பெற்றுள்ளனர்.
Arulmigu Annai Sri Osai Nayagi, Source
 பேச்சுத் திறன் வராத குழந்தைகளை இங்குள்ள ஸ்ரீ ஓசைநாயகி அம்பாளின் சன்னதிக்கு அழைத்து வந்து, வாக்வாதினி அர்ச்சனை மேற்கொள்கிறார்கள். அப்போது அம்பாளுக்கு அர்ச்சிக்கப்படும் நெய்வேத்யத்தை குழந்தைகளுக்கு காலை உணவாக தருகின்றனர். மேலும், அம்பாளின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட தேனை, 45 நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்துவர, திறன்குறைபாடுள்ள எத்தகையோரும் பேசும் திறனை பெறுகின்றனர்.


 கேட்கும் திறனும், பார்வைத் திறனையும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அம்பாள் அருள்வதை உள்ளூர் மக்களும், அப்பகுதி வியாபாரிகளும் விவரிப்பதை கேட்க முடியும். எனவே, திறன்குறைபாடுள்ள குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்துச் சென்று அம்பாளின் அருளைப் பெற வேண்டுகிறேன். அம்பாளின் சக்தியை அறிந்த அன்பர்களும், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை தெரிவித்து குழந்தைகளின் திறன் வளர்க்க உதவுமாறும் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

Other Links: