Sunday, December 4, 2016

ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam)

வாழ்வில் ஒரு முறையேனும்
சென்று தரிசிக்க வேண்டிய தலம்.


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி. 

உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் தலமாக சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம்

 காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக ஆறு தலங்கள் போற்றப்படுகிறது:

(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம்  நன்னிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம்.



Srivanchiyam Temple



பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும்
கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த
காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில்திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.
 
Srivanchinathar
Amma Manglaambhigai












இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும்
பழமையானதாகும். தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும்
என்ற வரமும் அளித்தார்.

அதன்படி நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள்
நடைபெறுகின்றன. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும்.

கங்காதேவி

ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,என வேண்டினாள். அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.

அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய
தீர்த்தமாக கருதப்படுகிறது.

மரணபயம், மனச்சஞ்சலம்

மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.
இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த
இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு
அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

பாடல் பெற்றுள்ள தலம்

ஸ்ரீவாஞ்சியம் தலம் தேவார மூவராலும் மணிவாசகப் பெருமானாலும் பாடல்
பெற்றுள்ள தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும்
மேலும் பல சிறப்புக்களை பெற்ற தலமாகவும்  திகழ்கிறது ஸ்ரீவாஞ்சியம்.

மூல மூர்த்தி வாஞ்சிநாதர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
அம்பிகையின் திருநாமம் மங்களாம் பிகை. எமன் அருள் பெற்ற . தலமாதலால் இங்கு எமனே சுவாமிக்கும் அம்பிகைக்கும் வாகனத் தொண்டு புரிகிறார். 

Sri Raghu Ketu, Sri Vanchinathar Temple
ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு
உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே
மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம்
காலசர்ப்பதோஷம்
நீங்கி நலம் பெறலாம்.

முக்தி 

 

Sri Yamadharamaraja

இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால், பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை.

எமதர்மனே இங்கு க்ஷத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்த படியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள். ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளை களால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். 

இதற்கு “ஆத்ம தர்ப்பணம்’ எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை
பருகினால் மரண அவஸ்தைப்படுகிற வர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம)கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

பிற தலங்களைப் போல் ஸ்ரீவாஞ்சிய தரிசனப் பேறு எளிதில் கிடைக்கப்
பெறுவதில்லை. தல யாத்திரை மேற்கொள்ள விழையும் அன்பர்களுக்கு இடர்களோ தடங்கல்களோ சோதனைகளாக வந்த வண்ணம் இருக்கும். அல்லது பல காரணங்களால் தாமதப் படவும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மாக்களின் கர்ம வினைப் பலன்கள் எளிதில் இத்தலத்தை அடைய விடுவதில்லை.

இருப்பினும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையே உபாயமாகப் பற்றி, உறுதியான
பக்தியோடு முயற்சி மேற்கொள்ளும் அடியவர்களுக்குப் பெருமான் பெரும்
கருணையோடு தரிசனம் தந்தருளி ஆட்கொள்கிறான்.

இத்திருத்தலத்திற்கு எப்படி செல்வது?

இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறை யில் இருந்து 36 km தொலைவிலும்,  கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது.

Image source and more information (click here)


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்